வாங்கிய நூல்களில் உள்வாங்கியவை – 3

நூல்: நல்லவன் வெல்வது எப்படி..?
ஆசிரியர்: பவான் சவுத்ரி
வெளியீடு: Wisdom Village Publications Pvt. Ltd.
பக்கங்கள்: 208    விலை: ரூ. 150/-

சில புத்தகங்களின் தலைப்பே நம்மை வாங்கவும், வாசிக்கவும் தூண்டும். அப்படி ஒரு நூல்தான் இது.
நான் வெற்றியாளனா என்பதில் எனக்குள்ளும், என்னை அறிந்தவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் எப்போதும் நிலவுகின்றன. ஆனால், நான் நல்லவன் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். வெற்றி  என்றாலே தவறான வழிகளில் அடைவது என்று சமகாலம் நமக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறது. அப்படியானால், என் நல்ல தன்மைகள் மாறாமல், நான் எப்படி “பெருவெற்றி” பெறுவது என்று நீண்ட நாட்களாக சிந்தித்து இருக்கிறேன். என் சிந்தனைகள் வளம்பெற இந்த நூல் பேருதவி புரிந்துள்ளது.
சிறந்த சிந்தனையாளராக விளங்கும் பவான் சவுத்ரி, அவ்வப்போது நமக்குத் தோன்றும் சிந்தனைகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறார். இவ்வளவு சிந்தனைகளைத் தொகுத்து வழங்குவது என்பது ஒரு இமாலயப் பணி. அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மூன்று பெரும்பகுதிகளை உள்ளடக்கிய இந்நூலில், முதல் பிரிவில் நேர்மையற்றவர்கள் செயல்படும் விதங்களை, 14 தலைப்புகளில் விளக்கியுள்ளார். எல்லா நேர்மையாளர்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இவற்றில் உள்ளன. ஏனென்றால், அப்போதுதான் விழிப்போடு இருந்து தன்னையும், பிறரையும் காக்க முடியும்.
இரண்டாவது பிரிவில், நேர்மையற்றவர்களை சமாளித்து எப்படி வெற்றி பெறுவது என்பதற்கான தந்திரங்கள், வல்லமைகள், வழிமுறைகளை மிகச் சிறப்பாக 15 தலைப்புகளில் விளக்கியுள்ளார். வெறும் நம்பிக்கையை மட்டுமல்லாது, நடைமுறையில் நல்லவர்கள் வெல்வதற்கான வழிகளையும் அருமையான உதாரணங்களோடு தந்திருக்கிறார்.
மூன்றாவது பிரிவில், ஆளுமையின் அடித்தளங்கள் என்று பல தலைப்புகளைத் தந்திருக்கிறார். என்னைப் பொறுத்தவரை, மிகவும் சுமாரான பகுதி இது. தத்துவங்களும், பொன்மொழிகளுமே நிறைந்துள்ளன.
வழக்கம்போல், கடினமான மொழிபெயர்ப்புதான் என்றாலும், நிறைவாகவே செய்துள்ளார் சின்னத்தம்பி முருகேசன். சிற்சில குறைகள் இருக்கின்றன… வார்த்தைகளின் தேர்விலும்  வாக்கிய அமைப்பிலும். பரவாயில்லை.
மொத்தத்தில், இது ஒரு முறை படித்து, விட்டு விடும் நூல் அல்ல. பல முறை படிக்க வேண்டியது. அடிக்கடி சிந்திக்க வேண்டியது. பாதுகாத்து அவ்வப்போது சரிபார்க்க வேண்டியது. இது வரை நான் படித்துள்ள ஆயிரக்கணக்கான நூல்களில், ஆகச்சிறந்த 50 நூல்களில், நிச்சயம் இந்த நூலுக்கு இடம் உண்டு.


Source: blogspot

வாங்கிய நூல்களில் உள்வாங்கியவை – 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *